விவசாய பொருட்களுக்கு பூஜை செய்யும் கைல் முகூர்த்த திருவிழா கோலாகல கொண்டாட்டம்
|குடகில் விவசாய பொருட்களை கொண்டு பூஜை செய்யப்படும் ‘கைல் முகூர்த்த’ திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.
குடகு-
குடகில் விவசாய பொருட்களை கொண்டு பூஜை செய்யப்படும் 'கைல் முகூர்த்த' திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.
கைல் முகூர்த்த விழா
குடகு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை முடிந்த பின்னர் 'கைல் முகூர்த்த' திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது 'கைல் முகூர்த்த' திருவிழா என்பது ஆயுத வழிபாடு என்று பொருள். நெல் அறுவடை செய்த பின்னர், விவசாயத்திற்கு பயன்படுத்திய பொருட்களை வயல்களில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி ஏர், கலப்பை, காளைகள், அரிவாள், கத்தி, வாள், கம்பு, துப்பாக்கி, அறுவடை செய்த பயிர்கள் உள்பட விவசாயத்திற்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
இந்தபூஜை முடிந்த பின்னர் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த போட்டிகளுக்கு முன்னதாக விவசாயிகள் நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு சமைத்து வழங்கப்படும்.
விளையாட்டு போட்டிகள்
அதன்படி இந்த ஆண்டு 'கைல் முகூர்த்த' திருவிழா குடகு மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. நெல் அறுவை செய்யப்பட்ட நாளில் இருந்து இந்த விழா தொடங்கும். இந்த கைல் முகூர்த்த திருவிழா முதற்கட்டமாக நாபொக்லு, பல்லமாவதி, காடிபேடு கிராமங்களில் நடக்கிறது. இதையடுத்து வருகிற 3-ந் தேதி குடகு மாவட்டம் முழுவதும் இந்த விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட நாட்களில் சில கிராமங்களில் இந்த 'கைல் முகூர்த்த' திருவிழா நடைபெறும்.
அந்த கிராமங்களில் உள்ள சமூக அமைப்பினர், கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் நகரப்பகுதிகளில் 'கைல் முகூர்த்த' விழாவையொட்டி கார் பந்தயம் நடத்தப்படும். இந்த விழாவின் போது சிலர் நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.