< Back
தேசிய செய்திகள்
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கார்கே, வேணுகோபால் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை
தேசிய செய்திகள்

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கார்கே, வேணுகோபால் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை

தினத்தந்தி
|
15 July 2023 3:29 PM IST

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வடகிழக்கு மாநில தலைவர்களுடன் கட்சியின் தேசிய தலைவர் கார்கே உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் அக்கட்சியை சேர்ந்த தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் அக்கட்சியின் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த வடகிழக்கு மாநில தலைவர்கள் பங்கேற்றனர். இதில், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் தொடர்ந்து வன்முறை பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, மணிப்பூரின் மக்களுடன் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கிறது என கூறியுள்ளார்.

பாட்னா நகரில் நடந்த கூட்டத்தின் பலனுள்ள தொடர்ச்சியே இந்த கூட்டம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இதில், கலந்து கொள்ள 24 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதில், கட்சிகளுக்கு இடையே விரிவான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

கூட்டத்தில் ம.தி.மு.க., கொ.தே.ம.க., வி.சி.க., புரட்சிகர சமூகவாத கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய எட்டு புதிய கட்சிகள் கலந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து உள்ளார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வடகிழக்கு மாநில தலைவர்களுடன் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்