< Back
தேசிய செய்திகள்
அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 May 2024 12:13 AM IST

உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவை ஆகும். ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சோனியா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

அதேநேரம் அமேதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த முறை ரேபரேலி தொகுதியில் பிரியங்கா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் அந்த தொகுதியில் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏன்? என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பில் எந்தவித தாமதமும் இல்ைல. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளரை இறுதி செய்ய கட்சித்தலைவர் கார்கேவுக்கு கட்சியின் தேர்தல் பணிக்குழு முழு உரிமை அளித்து இருக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அநேகமாக அடுத்த 24 முதல் 30 மணி நேரத்துக்குள் (இன்று மாலைக்குள்) அறிவிக்கப்படுவார்கள்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் முழுமையாக ஈடுபட்டு உள்ளார். இந்த தொகுதிகளின் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவதற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதற்கு இன்னும் 48 மணி நேரம் இருக்கிறது. மே 3-ந்தேதி காலை 11 மணி வரை அறிவிக்கவில்லை என்றால்தான் அது தாமதமாகும்.

தோல்வி பயம் காரணமாகவே காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கவில்லை என பா.ஜனதா கூறுவது நகைப்புக்குரியது. அப்படியானால் ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை அவர்களும் அறிவிக்காதது ஏன்?

அமேதியின் தற்போதைய எம்.பி. என்பதால் ஸ்மிரிதி இரானியை மீண்டும் அந்த தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் ரேபரேலி தொகுதிக்கு இன்னும் அறிவிக்கவில்லையே? வேட்புமனு தாக்கல் நிறைவடைவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் கூட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

அமேதி மற்றும் ரேபரேலியில் முறையே ராகுல் மற்றும் பிரியங்கா நிறுத்தப்படுவார்களா? என்ற கேள்விக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலளிக்கையில், 'ராகுல், பிரியங்கா, கார்கே எல்லாரும் எங்கள் சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள். நாடு முழுவதும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தென்னிந்தியா, குஜராத், உத்தரபிரதேசம், அசாம் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா, அடுத்தடுத்த கட்ட தேர்தல்களிலும் பிரசாரம் மேற்கொள்வார். எனவே வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் என்பது நியாயமற்றது' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்