< Back
தேசிய செய்திகள்
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்

தினத்தந்தி
|
5 May 2024 1:04 PM IST

சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரா்கள் நேற்று மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

வீரா்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் தப்பியோடினா். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் அருகில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி வீரா் ஒருவா் வீரமரணமடைந்தாா். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் காவல் துறையினா், அந்த பகுதியை சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனா்.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரரின் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் என்ற இடத்தில் ஐ.ஏ.எப். (IAF வாகனத்தின் மீது நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் ஆழ்ந்த வேதனையடைகிறோம். இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்க தேசத்துடன் இணைகிறோம்.

உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான விமானப் போராளியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்த விமான வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் அவர்களின் நலனுக்காக மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம். நமது வீரர்களுக்காக இந்தியா ஒன்றுபட்டுள்ளது"என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்