< Back
தேசிய செய்திகள்
ஜி-20 விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை - ராகுல்காந்தி கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஜி-20 விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை - ராகுல்காந்தி கண்டனம்

தினத்தந்தி
|
9 Sept 2023 5:03 AM IST

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, ஜனாதிபதி அளிக்கும் விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார்.

அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து முதல்-மந்திரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல்காந்தி

இதற்கு காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது அப்போது, ராகுல்காந்தி கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர். அது சில உண்மைகளை உணர்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை.

இது, மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இதற்கு பின்னால் எந்த மாதிரி சிந்தனை இருக்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்கார் முதல்-மந்திரி

காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகல் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது துரதிருஷ்டவசமானது. மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்தகைய நிலையில், எதிர்க்கட்சி தலைவரை அழைக்காதது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அவர் கூறினார்.

மன்மோகன்சிங் வரமாட்டார்

இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் தேவேகவுடா, மன்மோகன்சிங் ஆகியோர் உடல்நிலையை காரணம் காட்டி, விருந்தில் பங்கேற்க இயலாது என்று மத்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு ஆகியோர் தங்களது வருகையை உறுதி செய்துள்ளனர். பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

கர்நாடகா, சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்