கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை விடுவது உரிமை மீறல் - பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
|கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டி அளித்தார். ஆனால் கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை கொடுத்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது அவைக்கு வெளியே அறிக்கை விட்டதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்ற உரிமைகளை மீறியுள்ளார். இது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதும் ஆகும்' என தெரிவித்தார். இவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை வெளியிடுவதை தவிர்த்து அவைக்கு உள்ளே பிரதமர் பேச வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
முன்னதாக மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரிய மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதை சுட்டிக்காட்டினார். அதாவது, 'மணிப்பூர் பற்றி எரிகிறது. பெண்கள் கற்பழிக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால் பிரதமர் மவுனமாக இருக்கிறார். அதேநேரம் நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை அளிக்கிறார்' என குற்றம் சாட்டினார்.