< Back
தேசிய செய்திகள்
காங்கிரசை விட்டு விலகுகிறார்?; சுகாதாரத்துறை மந்திரி சுதாகருடன் கே.எச்.முனியப்பா திடீர் சந்திப்பு
தேசிய செய்திகள்

காங்கிரசை விட்டு விலகுகிறார்?; சுகாதாரத்துறை மந்திரி சுதாகருடன் கே.எச்.முனியப்பா திடீர் சந்திப்பு

தினத்தந்தி
|
27 Aug 2022 2:10 AM IST

சுகாதாரத்துறை மந்திரி சுதாகரை கே.எச்.முனியப்பா சந்தித்து பேசியுள்ளதால் அவர் காங்கிரசை விட்டு விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

அரசியல் இல்லை

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கே.எச்.முனியப்பா. அவர் மத்திய மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். சமீபகாலமாக அவர் காங்கிரசில் ஓரங்கட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகரை கே.எச்.முனியப்பா பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சுதாகருடன் சென்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கே.எச்.முனியப்பா நேரில் சந்தித்து பேசினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கே.எச்.முனியப்பா கூறுகையில், "மந்திரி சுதாகரை சந்தித்து பேசியதில் அரசியல் இல்லை. அவர் எனது நண்பர். அரசியலை தாண்டி அவருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. நான் காங்கிரசை விட்டு விலக மாட்டேன். சில நேரங்களில் கட்சியின் முடிவுகள் அதிருப்தியை தருகிறது. ஆனால் கட்சியின் நலன் கருதி அதை ஏற்று கொள்கிறேன். தற்போது காங்கிரசில் உள்ளேன். இங்கேயே நீடிப்பேன். குலாம்நபி ஆசாத் மூத்த தலைவர் அவர் விலகியுள்ளார். அதுபற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை" என்றார்.

சேர்க்க கூடாது

கோலாரில் உள்ளூர் பிரமுகர்கள் எம்.சி.சுதாகர், கொத்தனூர் மஞ்சுநாத் ஆகியோர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். அவர்கள் 2 பேரும் எம்.எல்.ஏ.க்களாக இருந்தபோது தனக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தனர் என்றும், அவர்களை கட்சியில் சேர்க்க கூடாது என்றும் கே.எச்.முனியப்பா கூறியதாக சொல்லப்படுகிறது. அவரது எதிர்ப்பையும் மீறி அந்த 2 பேரையும் சித்தராமையா காங்கிரசில் சேர்த்துள்ளார்.

இதனால் கே.எச்.முனியப்பா கடும் அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் காங்கிரசில் நீடிக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது. பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட கே.எச்.முனியப்பா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மகள் ரூபகலா சசிதர் கோலார் தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று விலகிய நிலையில் இன்னொரு மூத்த தலைவர் பா.ஜனதாவை நோக்கி செல்ல திட்டமிட்டு இருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்