< Back
தேசிய செய்திகள்
மந்திரி சுதாகருடன், கே.எச்.முனியப்பா மீண்டும் சந்திப்பு; பா.ஜனதாவில் சேர திட்டம்
தேசிய செய்திகள்

மந்திரி சுதாகருடன், கே.எச்.முனியப்பா மீண்டும் சந்திப்பு; பா.ஜனதாவில் சேர திட்டம்

தினத்தந்தி
|
24 Sep 2022 6:45 PM GMT

காங்கிரஸ் கட்சி மீதும் தலைவர்கள் மீதும் அதிருப்தியில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, மந்திரி சுதாகரை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். அவர் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

முன்னாள் மத்திய மந்திரி

கோலார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மீதும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீதும் கே.எச். முனியப்பா அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகரை சந்தித்து கே.எச்.முனியப்பா பேசி இருந்தார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேருவதற்கு கே.எச்.முனியப்பா தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எக்காரணத்தை கொண்டும் காங்கிரசில் இருந்து விலக மாட்டேன் என்று கே.எச்.முனியப்பா கூறி வருகிறார். அவரை, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மந்திரி சுதாகருடன் சந்திப்பு

இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வீட்டுக்கு நேற்று காலையில் கே.எச்.முனியப்பா சென்றார். அங்கு மந்திரி சுதாகரை சந்தித்து அவர் பேசினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக 2 பேரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேருவது குறித்து 2 பேரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதலில் தனது ஆதரவாளர்கள், முக்கிய பிரமுகர்களை பா.ஜனதாவில் சேர வைத்துவிட்டு, அதன்பிறகு, கே.எச்.முனியப்பா பா.ஜனதாவில் சேரலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு இல்லை. இதன்காரணமாக காங்கிரஸ் கட்சி சார்பில் கோலார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 7 முறை எம்.பி.யாக கே.எச்.முனியப்பா தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

செல்வாக்கை அதிகரிக்க...

கடந்த தேர்தலில் கே.எச்.முனியப்பா தோல்வி அடைந்திருந்தார். அதன்பிறகு, அவர் காங்கிரசில் இருந்து ஓரங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. அதே நேரத்தில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் பா.ஜனதா தனது செல்வாக்கை அதிகரிக்க கே.எச்.முனியப்பாவை இழுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.

கே.எச்.முனியப்பா பா.ஜனதாவுக்கு வந்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாகவே மந்திரி சுதாகரை கே.எச்.முனியப்பா சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்