அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இத்தனை வசதிகளா..? அசத்தும் ரெயில்வே
|அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், குளிர்சாதன பெட்டி இல்லாத சாதாரண வகை ரெயில்களாக இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி:
நாட்டில் ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப ரெயில் சேவையில் பல மாற்றங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்டு வரப்படுகின்றன. வசதியான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த கட்டணம் கொண்ட அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக இன்று 2 அம்ரித் பாரத் ரெயில்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ரெயில் பீகாரின் தர்பங்காவில் இருந்து அயோத்தி வழியாக டெல்லி ஆனந்த் விகார் வரை இயக்கப்படும். மற்றொன்று மேற்கு வங்காள மாநிலம் மால்டா டவுனில் இருந்து பெங்களூரு விஷ்வேஷ்வரய்யா ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.
புதிய வகை சூப்பர் பாஸ்ட் ரெயிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், குளிர்சாதன பெட்டி இல்லாத சாதாரண வகை ரெயில்களாகவே இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பல்வேறு வசதிகளை ரெயில்வே துறை செய்துள்ளது.
இந்த வகை ரெயில்களின் முன்புறமும் பின்புறமும் என்ஜின்கள் இருக்கும். வண்ணமயமாக மாற்றப்பட்ட இருக்கைகள், லக்கேஜ்கள் வைக்க போதுமான வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, சிசிடிவி கேமராக்கள், பொது தகவல் அமைப்பு, சென்சார் அடிப்படையிலான தண்ணீர் குழாய்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த ரெயிலில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 8 பொது பெட்டிகள் (முன்பதிவு அல்லாத பெட்டிகள்), 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ரெயிலில் 1,600 பயணிகள் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும்.
தேவையின் அடிப்படையில் வருங்காலங்களில் ஏராளமான அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கும் அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.