கேரளா: பழங்குடி இன பெண்ணுக்கு விமான பணிப்பெண் வேலை - சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு
|கேரளாவில் முதல் முறையாக பழங்குடி இன பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும், இன்னும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை.
இதனை மாற்றியமைத்து பழங்குடியின பெண்களும் கல்வியில் முன்னேறவும், வேலை வாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி அரசின் திட்டங்கள் பழங்குடியின பெண்களை சென்றடைய மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கண்ணூர் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பழங்குடி இன இளம்பெண் விமான பணிப்பெண் பயிற்சியில் சேர்ந்தார்.
இந்த பயிற்சி பெற தனியார் மையங்களில் படித்தால் லட்சக்கணக்கில் செலவாகும் என கூறப்படுகிறது. ஆனால், கோபிகா, அரசின் உதவி தொகையை பெற்று இந்த பயிற்சியில் சேர்ந்தார். பயிற்சி நிறைவு பெற்று அவர், அடுத்த மாதம் பணிக்கு செல்ல இருக்கிறார்.
கேரளாவில் பழங்குடி இன பெண் ஒருவர் விமான பணிப்பெண் வேலையில் சேர இருப்பது இதுவே முதல் முறையாகும். இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் கோபிகா விமான பணிப்பெண் உடையுடன் இருக்கும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. இதை பார்த்த பலரும், பழங்குடி இன மக்களுக்கு பெருமை சேர்ந்த கோபிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.