கேரளா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தவறான தகவலை பரப்பிய யூடியூபர் கைது
|மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டுகள் முறையை மீண்டும் மக்களவை தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த யூடியூபர் தெரிவித்திருந்தார்.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த வெனிஸ் டி.வி. என்டர்டெயின்ட்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி தவறான தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ஆலப்புழை தெற்கு போலீசார் அந்த யூடியூப் சேனல் உரிமையாளரான யூடியூபர் மீது வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவர் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் பதற்றத்தையும், பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டுகள் முறையை மீண்டும் மக்களவை தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று அவர் சேனலில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவேற்றியிருந்தார். இதைத் தொடர்ந்தே அந்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.