கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தை பசியால் அழுதபோது தாய்ப்பால் கொடுத்து பாதுகாத்த பெண் போலீஸ்! நெகிழ்ச்சி சம்பவம்
|குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இந்த பெண் போலீஸ் அதிகாரி பாலூட்டியுள்ளார்.
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் சேவாயூர் காவல்நிலைய பெண் போலீஸ் அதிகாரி ரம்யா இப்போது அனைவரது மனதையும் வென்று வருகிறார்.
கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இந்த பெண் போலீஸ் அதிகாரி பாலூட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியானது முதல், அவரது இந்த உன்னத செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பூலக்கடவைச் சேர்ந்த ஆஷிகா என்ற பெண், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக தனது குழந்தையை கடத்திச் சென்றதாக தனது கணவர் ஆதில் மற்றும் அவரது தாய் மீது சேவாயூர் போலீஸில் புகார் அளித்தார். கடத்தப்பட்ட குழந்தையுடன் ஆதில் மற்றும் அவரது தாயார் சுல்தான் பத்தேரியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே பெண் போலீஸ் அதிகாரி ரம்யா உட்பட அதிகாரிகள் குழு அங்கு வந்து குழந்தையை மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக குழந்தையின் தந்தை ஆதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீண்ட நேரமாக பசியால் வாடியிருந்த குழந்தையின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.குழந்தையின் மருத்துவ பரிசோதனையின் போது, குழந்தையின் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதை மருத்துவர் கவனித்தார். அப்போது குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது.
இதை கவனித்த போலீஸ் அதிகாரி ரம்யா, உடனே டாக்டரிடம், தான் ஒரு வயது குழந்தைக்கு தாய் என்றும், இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்றும் கேட்டுள்ளார். மருத்துவர் அனுமதித்த தருணத்தில், அந்த குழந்தையை தனது சொந்த குழந்தையாக உணர்ந்து அவர் குழந்தைக்கு பாலூட்டினர்.
மேலும் இது தனது வாழ்வின் மிக அசாதாரணமான தருணம் என்றும் இந்த நாள் தனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமுள்ள நாள் என்றும் பசியால் இந்தக் குழந்தை அழுதபோதும்கூட என் குழந்தைபோல் நினைத்துதான் பால் கொடுத்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.