< Back
தேசிய செய்திகள்
மங்களூரு அருகே  நீச்சல் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் சாவு
தேசிய செய்திகள்

மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் சாவு

தினத்தந்தி
|
29 Aug 2023 6:45 PM GMT

மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் உயிரிழந்தார். ஓணம் பண்டிகையை கொண்டாட வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு-

மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் உயிரிழந்தார். ஓணம் பண்டிகையை கொண்டாட வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மதுபான விடுதி

தட்சிண கன்னடா மாவட்டம் தலப்பாடி பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இந்த மதுபான விடுதியில் நீச்சல் குளமும் உள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் ஒசங்கடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது35). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் மங்களூரு வந்தார். பின்னர் தலப்பாடியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றனர்.

அங்குள்ள நீச்சல் குளத்தில் ஹரிஷ் உள்பட 5 பேரும் ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஹரிஷ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் ஹரிசை மீட்க சென்றனர். ஆனால் அவர் அதற்குள் தண்ணீரில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து அவர்கள் மங்களூரு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உல்லால் போலீசாருடன் வந்தனர். அவர்கள் நீச்சல் குளத்தில் குதித்து ஹரிசின் உடலை பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ஹரிஷ் ஒசங்கடி பகுதியில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் ஓணம் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாட மங்களூரு வந்துள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்