கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த மதபாடசாலை ஆசிரியருக்கு சாகும் வரை சிறை - போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு
|வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம், வழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் 47 வயது மத பாடசாலை ஆசிரியர். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஆஸ்பத்திரி அதிகாரிகள் வழிக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவரது தந்தையே பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மஞ்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.6.60 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.