< Back
தேசிய செய்திகள்
கல்லூரி பேராசிரியர் கையை வெட்டிய வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கல்லூரி பேராசிரியர் கையை வெட்டிய வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு அறிவிப்பு

தினத்தந்தி
|
13 July 2023 4:00 AM IST

கல்லூரி பேராசிரியர் கையை வெட்டிய வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் என்.ஐ.ஏ. கோர்ட்டு அறிவித்தது. தண்டனை விவரம் இன்று வெளியாகிறது.

எர்ணாகுளம்,

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே நியூமேன் கல்லூரியில் மலையாளத்துறை பேராசிரியராக டி.ஜே.ஜோசப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி நடந்த தேர்வில் பி.காம். மலையாள பாடப்பிரிவு வினாத்தாளில் இறை தூதர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வினாத்தாளை ஜோசப் தயாரித்து இருந்தார். இதுதொடர்பாக அதே ஆண்டு ஜூலை 4-ந் தேதி ஒரு கும்பல் ஜோசப் கையை வெட்டியது. இதுகுறித்து தொடுபுழா போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 37 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு 26 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 11 பேரிடம் விசாரணை நடந்து வந்தது.

6 பேர் குற்றவாளிகள்

இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (தடை செய்யப்பட்டது) அமைப்பின் மாவட்ட நிர்வாகியாக இருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த நாசர், சுஜல் இருவரும் திட்டமிட்டு பேராசிரியரின் கையை வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆயுதம் கொண்டு தாக்குதல், கூட்டாக சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பயங்கரவாத தொடர்பு இருப்பதை கோர்ட்டு உறுதி செய்தது.

இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கமணீஸ், பேராசிரியர் கையை வெட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் சுஜல், நாசர், நஜீப், நவ்ஷாத், மொய்தீன் குஞ்சு, அயூப் ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தார். மேலும் சபீக், மன்சூர், அசீஸ், சுபைர், முகமது ரபி ஆகிய 5 பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். இன்று (வியாழக்கிழமை) குற்றவாளிகள் 6 பேருக்கான தண்டனை விவரம் வெளியாகிறது.

நீதியாக கருதவில்லை

இதுகுறித்து பேராசிரியர் ஜோசப் கூறுகையில், என்னை வழியில் தடுத்து நிறுத்தி கையை வெட்டிய நபர்கள் வெறும் அம்புகள் மட்டுமே. இந்த அம்புகளை எய்த நபர் யார்? என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட எனக்கு கிடைத்த நீதியாக இதனை கருதவில்லை. தண்டனை விதிக்கப்பட உள்ள 6 பேரும் பலிகடா ஆக்கப்பட்டவர்கள். இந்த சம்பவம் மூலம் எனது வாழ்க்கையின் போக்கு திசை மாற்றப்பட்டு விட்டது என்றார்.

மேலும் செய்திகள்