< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

கேரளாவில் களைக்கட்டிய ஓணம் பண்டிகை: புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று பொதுமக்கள் வழிபாடு

தினத்தந்தி
|
29 Aug 2023 8:53 AM IST

கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர்.

திருவனந்தபுரம்,

தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

10 நாட்களும் கொண்டாட்டம்: இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.. அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர். அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி கோவிலுக்கு பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொச்சியில் உள்ள திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் ஒரு சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது.

மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்