< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் செல்பியால் விபரீதம்: ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி பலி
தேசிய செய்திகள்

கேரளாவில் 'செல்பி'யால் விபரீதம்: ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி பலி

தினத்தந்தி
|
31 July 2023 4:23 AM IST

கேரளாவில் பாறையில் நின்று ‘செல்பி' எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி பரிதாபமாக இறந்தனர். காப்பாற்ற முயன்ற உறவினரும் பலியானார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சித்திக் (வயது 29). இவருடைய மனைவி நவுபியா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதி பாரிப்பள்ளியை அடுத்த பள்ளிக்கால் என்ற பகுதியில் உள்ள உறவினரான அன்சில் (28) என்பவருடைய வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மதிய விருந்தை முடித்து விட்டு மாலையில் சித்திக், நவுபியா பொழுதை உற்சாகமாக போக்குவதற்காக அருகில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு புறப்பட்டனர். உடன் அன்சில் குடும்பத்தினரும் சென்றனர்.

'செல்பி'யால் விபரீதம்

அப்போது புதுமண தம்பதி ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று 'செல்பி' எடுக்க ஆசைப்பட்டனர். அதன்படி அதன் மீது ஏறி 'செல்பி' எடுத்த போது திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தனர்.

இதனால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் அபய குரல் எழுப்பினர். உடனே அன்சில் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் ஆற்றில் மூழ்கினார். இதனை கரையில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

புதுமண தம்பதி சாவு

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அன்சில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் புதுமண தம்பதி உடல்கள் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலையில் மீண்டும் தேடிய போது புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கியபடி இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவருடைய உடல்களும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'செல்பி' எடுக்கும் ஆசையில் புதுமண தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்