ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க கேரளா அரசு மறுப்பு
|கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மந்திரி சுரேஷ் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளா சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை மந்திரி சுரேஷ் கூறுகையில், கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.இது குறித்து, ஐ.யு.எம்.எல்., - எம்.எல்.ஏ., அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்-மந்திரி பினராயி விஜயன்,
ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்க போவதில்லை.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.