< Back
தேசிய செய்திகள்
கேரள நரபலி விவகாரம்; கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
தேசிய செய்திகள்

கேரள நரபலி விவகாரம்; கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
12 Oct 2022 9:20 AM GMT

கேரளாவில் இரு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.



திருவனந்தபரம்,


கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்த லாட்டரி வியாபாரியான ரோஸ்லின் (வயது 50) மற்றும் தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட பகுதியை சேர்ந்த பத்மா (54) என்ற மற்றொரு லாட்டரி வியாபாரி என மர்மமான முறையில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், 2 பேரும் கொடூர முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முகமது ஷபி என்ற ஷிகாப்பு (வயது 48), திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவல் சிங் என்ற பகவந்த் (வயது 55), பாரம்பரிய மசாஜ் சிகிச்சை நிபுணரான இவரது மனைவி லைலா (வயது 52) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பகவந்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இருந்த அவர், முகமது ஷபியின் அறிமுகம் ஏற்பட்ட பின்பு, பெண்களை நரபலி கொடுக்கும் செயலில் இறங்கி உள்ளார்.

இதற்காக இரண்டு முறை தனித்தனியே முகமது ஷபி, ரூ.10 லட்சம் பணம் பெற்று உள்ளார். வாழ்க்கையில் திடீர் பணக்காரர்களாக ஆக ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்த பகவந்த், லைலா மற்றும் இடைத்தரகர் முகமது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து திருவல்லாவில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை வெளியே எடுத்து, அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த ஜூனில், இதே கேரள தம்பதி அவர்களது வீட்டில் வைத்து மற்றொரு பெண்ணையும் நரபலி கொடுத்து உள்ளனர் என மற்றொரு தகவலையும் போலீசார் கூறியுள்ளனர்.

அவர்கள் 3 பேரும் எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்பின் அவர்கள் 3 பேரும் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையும் படிக்க... நிர்வாண வழிபாடு, மனிதகறி உணவு, பாலியல் உறவு... அதிர வைத்த கேரள தம்பதி

மேலும் செய்திகள்