கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி : உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி
|கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி :உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா - பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்கள் ஆகும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவின் உறவினர்கள், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால், பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால், கொச்சி காவல்துறையில் செப்டம்பர் 27-ல் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பத்மாவின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்த போலீசார் கடைசியாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவலா பகுதியோடு சிக்னல் நின்றதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் விசாரணையில், திருவலா பகுதி தம்பதியால் பத்மாவும், நோஸ்லின் என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் அம்பலமானது.
இதுகுறித்து கொச்சி காவல் ஆணையர் கூறுகையில், கொல்லப்பட்ட இரு பெண்களின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நரபலி கொடுத்த பின் அந்த பெண்ணின் உடலையும் துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் மற்றொரு இடத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் புதைத்துள்ளனர். நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.