< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மூணாறு ஆனையிறங்கல் படகு சவாரிக்கு கேரள ஐகோர்ட்டு தற்காலிக தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
|16 July 2023 8:28 PM IST
படகு சவாரிக்கு தற்காலிக தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மூணாறு ஆனையிறங்கல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் 2015-ம் ஆண்டு முதல் படகு சவாரி நடைபெற்று வந்தது. தேயிலை தோட்டங்கள் வழியாக சவாரி நடைபெற்றதால் சுற்றுலா பயணிகளிடம் இந்த படகு சவாரி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஆனையிறங்கல் பகுதி காட்டு யானைகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும், உரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் நடைபெறும் படகு சவாரியால் நீர்நிலை மாசுபடுகிறது என்பதாலும் படகு சவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு படகு சவாரிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.