ஹேமா கமிட்டி அறிக்கை; சிறப்பு அமர்வில் விசாரிக்கிறது கேரள ஐகோர்ட்டு
|ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிறப்பு அமர்வில் விசாரிக்க உள்ளதாக கேரள ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரையுலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தினமும் நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவையும் கேரள அரசு அமைத்துள்ளது. அந்த குழு, பாலியல் புகார் கூறிய நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடவேளபாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரபல நடிகர் நிவின் பாலி மீதும் இளம்பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிவின் பாலி குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகை உலுக்கி வருகிறது.
இதனிடையே, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க இருப்பதாக கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெண் நீதிபதிகளும் இடம் பெறுவார்கள் என்று தலைமை பொறுப்பு தலைமை நீதிபதி முகம்மது மஸ்தாக் கூறியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி வாய்மொழியாக இந்த கருத்தை தெரிவித்தார்.