< Back
தேசிய செய்திகள்
கேரள தங்க கடத்தல் வழக்கு; சி.பி.ஐ. விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு; சி.பி.ஐ. விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்

தினத்தந்தி
|
21 Jun 2022 5:14 PM IST

கேரள தங்க கடத்தல் வழக்கில் மாநில அரசின் முக்கிய நிர்வாகிகளின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை என பிரதமர் மோடிக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார்.



திருவனந்தபுரம்,



திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு 2020ம் ஆண்டில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட, அன்றைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5-7-2020 அன்று சுங்கத்துறையினர், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி பெங்களூருவில் 11-7-2020 அன்று ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன், தூதரகத்தின் இன்னொரு ஊழியர் சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் சில தினங்களுக்கு முன் கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அதில் தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி ஜலீல் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதென்று கூறினார்.

ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்நிலையில், வழக்கின் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கடத்தலில் உண்மையில் ஈடுபட்ட நபர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் (கேரள முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர்) என உங்களது கவனத்திற்கு கொண்டுவர நான் விரும்புகிறேன்.

இதுபோன்ற உயர் பதவியிலுள்ள அதிகாரிகளால், என்னை போன்ற ஊழியர்கள் சிலர் இந்த நாசகர ஊழலுக்கு துணை நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நான், என்னுடைய பணி மேலாளர்களின் உத்தரவுகளை பணிந்து ஏற்க மட்டுமே செய்தேன். ஏற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் வழியே அதனை செய்தேன். இந்த விவகாரத்தில் கூற என்னிடம் ஒன்றும் இல்லை. சுங்க அதிகாரிகளால் இந்த கடத்தல் வெளிச்சத்திற்கு வந்த பின்னர், 15 மாதங்களாக எங்களை சிறையில் அடைத்து, தவிக்க விட்டு விட்டனர். எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடாமல் உள்ளனர்.

சிவசங்கர் கூட 3 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள அரசு, மதிப்புமிகு வேலை ஒன்றையும் வழங்கி, கண்ணிய வாழ்வொன்றை நடத்தவும் அனுமதித்து உள்ளது என ஸ்வப்னா குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

அதனால், கேரள தங்க கடத்தல் வழக்கில் மாநில அரசு பதவியில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பிரதமர் மோடிக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்