< Back
தேசிய செய்திகள்
கேரளா: பெண் டாக்டர் குத்திக்கொலை...டாக்டரின் தந்தைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் மம்முட்டி...!
தேசிய செய்திகள்

கேரளா: பெண் டாக்டர் குத்திக்கொலை...டாக்டரின் தந்தைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் மம்முட்டி...!

தினத்தந்தி
|
12 May 2023 12:04 PM IST

கேரளாவில் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தந்தைக்கு, நடிகர் மம்முட்டி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள நெடும்பனா அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சந்தீப் (வயது 41). இவர் மதுபோதை அடிமை ஆவார். இவர் குடிபோதையில் தன் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது நேரிட்ட கைகலப்பில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே அவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக புகார் கிடைத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரது கால் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முன் தினம் அதிகாலையில் அவரை கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த கோட்டயத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் வந்தனா தாஸ் (23) அவருக்கு சிகிச்சை அளித்தார். அவரது கால் காயத்துக்கு மருந்து தடவி கட்டு போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது சந்தீப் திடீரென வெறி கொண்டு அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கினார். அங்கு இருந்த கத்திரியையும், அறுவை சிகிச்சை செய்வதற்கான கத்தியையும் எடுத்து, தனக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் வந்தனாவை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் அலறித்துடித்தார். மேலும், தன்னை அங்கே சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்த போலீசாரையும் அவர் தாக்கினார்.

படுகாயம் அடைந்த டாக்டர் வந்தனா தாசை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனது பெற்றோர் மோகன்தாஸ், வசந்தகுமாரிக்கு ஒரே மகள் ஆவார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண் டாக்டர் வந்தனா தாசின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை மோகன்தாசுக்கு நடிகர் மம்முட்டி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்