கேரளா: அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருள் விற்பனை - நாடக நடிகை கைது
|அஞ்சுகிருஷ்ணாவை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து 52 கிராம் எடையுள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி இடப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அடுக்கு மாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த வீட்டில் தங்கியிருந்த அஞ்சுகிருஷ்ணா (வயது 29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாடக நடிகை என்பதும், காசர்கோடு பகுதியை சேர்ந்த சமீருடன் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அஞ்சுகிருஷ்ணாவை போலீசார் கைது செய்து, அந்த வீட்டில் இருந்து 52 கிராம் எடையுள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் அஞ்சு கிருஷ்ணாவை போலீசார் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஞ்சுகிருஷ்ணாவுடன் வசித்து வந்த சமீருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதும் தெரியவந்தது. தலைமறைவாகி விட்ட சமீரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்