மதரசா ஆசிரியர் கொலை வழக்கு.. 3 ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை விடுதலை செய்தது கேரள கோர்ட்டு
|குற்றவாளிகள் மீதான கொலை குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
காசர்கோடு:
கேரளாவின் காசர்கோடு மாவட்டம், சூரியில் உள்ள மசூதி வளாகத்தில் மதரசா ஆசிரியர் முகமது ரியாஸ் மவுலவி கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மசூதி வளாகத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், அவரது கழுத்தை அறுத்து கொன்றது.
இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் அகிலேஷ், நிதின், அஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதக்கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
காசர்கோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 97 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 215 ஆவணங்கள் மற்றும் 45 ஆதாரங்கள் வழங்கப்பட்டன. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.கே.பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றவாளிகள் மீதான கொலை குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முஸ்லிம் சமூகத்துடன் பகைமை இருந்ததாக அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறியதையும் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்தும், அரசு தரப்பு சாட்சிகளிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் வழக்கிற்கு தேவைப்படும் பயனுள்ள எந்த தகவலும் கிடைக்கவில்லை.
செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் தரவுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்யத் தவறியது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறந்துபோனவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை அறிந்து விசாரிப்பதற்கான சிறந்த வாய்ப்பை அரசுத் தரப்பு கெடுத்துவிட்டது.
இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதே அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதற்கு போதுமானது. அத்துடன், விசாரணை சிறப்பானதாக இல்லை, ஒரு சார்பாகவே உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சந்தேகத்தின் பலனை வழங்கி அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் ஆடையில் மவுலவியின் ரத்தக்கறை இருந்தது. குற்றம்சாட்டப்பட்டர்களில் ஒருவர் பயன்படுத்திய கத்தியில் மவுலவியின் ஆடையின் ஒரு பகுதி காணப்பட்டது. அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்துள்ளோம், என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.