கேரளா குண்டுவெடிப்பு; வன்முறையால் வன்முறையைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது - சசி தரூர் எம்.பி.
|காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என சசி தரூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் நேற்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் என்ற நபர் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் என்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து மார்ட்டின் மீது உபா சட்டத்தின் கீழ் பிரிவு 16 (1ஏ) மற்றும், இந்திய தண்டனை சட்டம் 302, 307 மற்றும் 3 பிரிவு ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"கேரளாவில் மதக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து விரைவாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் அது போதாது. கொன்று அழிக்கும் மனநிலைக்கு என் மாநிலம் இரையாவதை பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும். வன்முறையால் வன்முறையைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்பதை அவர்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு சசி தரூர் பதிவிட்டுள்ளார்.