< Back
தேசிய செய்திகள்
கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
25 Aug 2022 7:37 AM IST

கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கேரள சட்டசபையில் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியபோது, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

மத்திய அரசு நடப்பு நிதிஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிச்சந்தையில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடி கடன் வாங்க கேரளாவுக்கு அனுமதி அளித்தது. ஆனால், கேரள அரசு நடத்தும் நிறுவனமான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் வாங்கிய ரூ.14 ஆயிரம் கோடி கடனை கேரள அரசின் கடனுடன் சேர்த்து விட்டது.

இதனால், கேரள அரசு வாங்க வேண்டிய கடன் அளவு குறைகிறது. இதன்மூலம் கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஏர் இந்தியா ஹோல்டிங்ஸ், இந்திய ரெயில்வே நிதி கழகம் ஆகியவை வாங்கிய கடன்கள், மத்திய அரசின் கடனுடன் சேர்க்கப்படுவது இல்லை.

இதன்மூலம், தனக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு பின்பற்றுகிறது.

மேலும், கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் வெளியிட்ட கடன் பத்திரங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதனால் கேரளாவில் வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது என்று அவர் பேசினார்.

கேரள நிதி மந்திரி பாலகோபாலும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

கேரள அரசு வாங்க வேண்டிய கடன் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது. அத்துடன், 250 சொகுசு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குைறத்துவிட்டது. இதனால், மாநில அரசுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டில் ரூ.12 ஆயிரத்து 500 கோடி குறைந்துள்ளது. வரி குறைந்தபோதிலும், அந்த சொகுசு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்களுக்கும் பலன் கிடைக்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுடன் எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்