< Back
தேசிய செய்திகள்
கேரளா:  மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டால் ரூ.25 கோடி வென்ற நபர்
தேசிய செய்திகள்

கேரளா: மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டால் ரூ.25 கோடி வென்ற நபர்

தினத்தந்தி
|
19 Sept 2022 9:15 PM IST

கேரளாவில் மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டில் ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்து உள்ளது.


திருவனந்தபுரம்,



கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஓணம் பண்டிகை இந்த ஆண்டு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன. இதில், திருவனந்தபுரம் நகரில் ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்து உள்ளது.

30 வயதில் இந்த பரிசு தொகையை வென்றுள்ள அனூப் கூறும்போது, நான் ஒரு சமையல் கலைஞர். எனக்கு சமைப்பதில் விருப்பம். உணவு விடுதி ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எனது கனவு. அதனால், சிறிது தொகையை அதில் முதலீடு செய்வேன் என கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் அவர் ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை வென்றிருக்கிறார். இவரது மனைவி மாயா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். லாட்டரி சீட்டு வாங்க பணம் பற்றாக்குறையாக இருந்துள்ளது என கூறும் அனூப், தனது மகனின் சேமிப்புக்காக வைத்திருந்த உண்டியல் தொகையை கொண்டே பரிசுக்கான லாட்டரி சீட்டை வாங்கினேன் என கூறியுள்ளார்.

அவருக்கு பரிசு கிடைத்ததும் அதுபற்றி செய்தி சேகரிக்க ஊடக துறையினர் அவரை தேடி சென்றுள்ளனர். இதுபற்றி அனூப் கூறும்போது, பரிசு தொகை வென்றது பற்றி முதலில் நம்பவே முடியவில்லை.

அதனால், மனைவியிடம் மீண்டும் விவரங்களை ஆய்வு செய்யும்படி கூறினேன். ஒரு குளியல் எடுத்து கொண்டு வந்தேன். முடிவுகளை பார்த்தேன். இன்னும் அந்த பதற்றத்தில் இருந்து வெளிவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் லாட்டரி சீட்டை வாங்கினேன். லாட்டரி ஏஜென்சியில் வேலை செய்யும் எனது சகோதரியிடம் இருந்து சீட்டை வாங்கினேன் என கூறும் அனூப், முதலில் வேறொரு சீட்டை வாங்கினேன்.

அதன்பின்னர், கடைசி தருணத்தில் பரிசுக்கான இந்த சீட்டை வாங்கினேன். மகிழ்ச்சியாகவும், பதற்றமுடனும் உள்ளது என அவர் கூறியுள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரி மறைவுக்கு பின்னர் நிதி நெருக்கடியில் சிக்கி போராடி வந்தேன் என்றும் இந்த வெற்றி தனது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

அனூப்புக்கு வரி கழிவு போக, ரூ.15.75 கோடி பரிசு தொகை கிடைக்கும். 2-வது பரிசு ரூ.5 கோடி மற்றும் 3-வது பரிசு ரூ.1 கோடியானது தலா 10 வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும்.

மேலும் செய்திகள்