கேரளாவில் 5 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; பீகார் இளைஞர் குற்றவாளி - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
|வழக்கின் தண்டனை விவரங்கள் வரும் 9-ந்தேதி அறிவிக்கப்படும் என எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்பாக் ஆலம் என்ற நபர், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கடந்த ஜூலை 28-ந்தேதி குளிர்பானம் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, உடலை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றுள்ளார்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி அஸ்பாக் ஆலமை கைது செய்தனர். அவர் மீது கொலை, கற்பழிப்பு, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து சம்பவம் நடந்து 34-வது நாளில் எர்ணாகுளம் கோர்ட்டில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று 100-வது நாளில் வழக்கு விசாரணை நிறைவு செய்யப்பட்டது. அஸ்பாக் ஆலம் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை குற்றவாளி என எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் வரும் 9-ந்தேதி அறிவிக்கப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது.