< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் அதிர்ச்சி: நடைபாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட சுற்றுலா பயணிகள்
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிர்ச்சி: நடைபாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
9 March 2024 8:35 PM GMT

கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுற்றுலா தலமாகும். இங்கு கடல் அழகை ரசிக்க வசதியாக கேரள சுற்றுலா துறை சார்பில் சுமார் 100 மீட்டர் நீளத்தில் கடலுக்குள் மிதக்கும் நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் இந்த பாலத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கடல் அழகை ரசித்த வண்ணம் இருந்தனர்.

அப்போது திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து மிதக்கும் பாலத்தில் பயங்கரமாக மோதின. இதனால் பாலம் பயங்கரமாக அங்கும் இங்குமாக ஆடியது. பாலத்தின் கைப்பிடி தடுப்பை தாண்டி சுற்றுலா பயணிகள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் மிதக்கும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் கடலில் மூழ்காமல் மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாக அவர்களை உடனே மீட்க முடியவில்லை.

தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற ஊழியர்கள் கடலில் தத்தளித்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்