திகார் சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்
|நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோர்ட்டு அனுமதி அளித்தும் திகார் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் திகார் சிறையின் வெளியே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரை கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று ஜார்க்கண்டில் நடைபெற்ற கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
"நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது. என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன். ஆனால் திகார் சிறை நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் வெளியிட்டுள்ளது. அதை படித்ததும் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். எனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது" என்று குறிப்பிட்டுள்ளார்.