< Back
தேசிய செய்திகள்
கெஜ்ரிவாலின் கைது ஒரு மக்கள் புரட்சியை உருவாக்கும் - அகிலேஷ் யாதவ்
தேசிய செய்திகள்

'கெஜ்ரிவாலின் கைது ஒரு மக்கள் புரட்சியை உருவாக்கும்' - அகிலேஷ் யாதவ்

தினத்தந்தி
|
22 March 2024 4:30 AM IST

பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடமிருந்து அகற்ற நினைக்கிறது என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தோல்வி பயத்தில் தானே சிறைப்பட்டவர்கள், வேறொருவரை சிறையில் அடைத்து என்ன செய்யப் போகிறார்கள்? மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்த பிறகு, பயத்தின் காரணமாக பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படியாவது மக்களிடமிருந்து அகற்ற நினைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது ஒரு புதிய மக்கள் புரட்சியை உருவாக்கும்."

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்