< Back
தேசிய செய்திகள்
கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது - அசாம் முதல்-மந்திரி விமர்சனம்
தேசிய செய்திகள்

'கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது' - அசாம் முதல்-மந்திரி விமர்சனம்

தினத்தந்தி
|
11 May 2024 6:28 PM IST

கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

திஸ்பூர்,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் தனக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சுயமரியாதை கொண்ட எந்த நபராக இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு ஜாமீனில் வெளியே வந்திருக்க மாட்டார். இப்படிப்பட்ட ஒரு ஜாமீன் தனக்கு தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்