குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி!
|குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குஜராத்தில் பேசுகையில்,
"குஜராத்தில் ஏற்கனவே உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தப்படும் என்றும் பல புதிய பள்ளிகள் மாநிலம் முழுவதும் அதிக அளவில் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
குஜராத்தில் பிறந்த அனைவருக்கும் இலவச மற்றும் தரமான கல்வி கிடைக்கும். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். பெற்றோரிடம் பணம் இருந்தால், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.
ஆனால் அவர்களிடம் பணம் இல்லையென்றால், அவர்களின் குழந்தைகளுக்கு பணப் பற்றாக்குறையால் நல்ல கல்வி கிடைக்காமல் இருக்க விடமாட்டோம். அவர்களுக்கு சிறந்த கல்வியை இலவசமாக வழங்குவோம்.
மேலும், அனைத்து தனியார் பள்ளிகளும் தணிக்கை செய்யப்பட்டு பெற்றோரிடம் இருந்து வசூலிக்கப்படும் "கூடுதல் பணம்" திரும்ப அளிக்கப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை விற்கும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேவை முறைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
பெண்களுக்கான உயர்கல்விக்கான வசதிகள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்யும்" என்று உறுதியளித்தார்.
முன்னதாக கெஜ்ரிவால், தனது முந்தைய குஜராத் பயணங்களின் போது நடைபெற்ற பொதுக் கூட்டங்களில், மின்சாரம், வேலை வாய்ப்புகள், வேலையில்லாத் திண்டாட்டம், பெண்கள் மற்றும் பழங்குடியினர் தொடர்பான பல துறைகளில் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.