ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு சிறையில் இருந்து கெஜ்ரிவால் புது உத்தரவு
|கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோதும், நீர் ஆணையம் தொடர்புடைய உத்தரவு, அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகள் பற்றிய 2-வது உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் ஏப்ரல் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி தலைவர்கள் அறிவித்து உள்ளனர். இதன்படி ஏப்ரல் 7-ல், டெல்லி அரசின் மந்திரிகள், கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், வர்த்தகர்கள் வருகை தந்து, எங்களுடன் பங்கேற்கலாம் என்றும் டெல்லி மந்திரி கோபால் ராய் கூறினார்.
சிறையில் இருந்தபோதும், நீர் ஆணையம் தொடர்புடைய உத்தரவு ஒன்றையும், அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகள் பற்றிய 2-வது உத்தரவையும் கெஜ்ரிவால் பிறப்பித்து உள்ளார். இவற்றை நிறைவேற்றுவோம் என்று மந்திரிகளும் கூறியுள்ளனர். இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு திகார் சிறையில் இருந்தபடி, கெஜ்ரிவால் புது உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
இதுபற்றி அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவால் டிஜிட்டல் ஊடகம் வழியே கூறும்போது, கெஜ்ரிவால், சிறையில்தான் அடைப்பட்டு இருந்தபோதும், அவருடைய குடும்பத்தினரான டெல்லியின் 2 கோடி மக்கள் எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடாது என கூறியுள்ளார். அதனால் நாம் அலுவலக பணியுடன் சேர்த்து, அவற்றையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், 6 மாத சிறைவாசத்திற்கு பின்னர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. வெளியே வந்த அவர், சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவருடைய காலில் விழுந்து சஞ்சய் சிங் ஆசி பெற்றார்.