டெல்லி மாநகராட்சி தேர்தலை கடேவாரா பகுதி மக்கள் புறக்கணிப்பு
|டெல்லி மாநகராட்சி தேர்தலை கடேவாரா பகுதி மக்கள் புறக்கணித்துள்ளனர்.
புதுடெல்லி,
புதுடெல்லி, டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலுக்காக 13 ஆயிரத்து 638 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தேர்தலை முன்னிட்டு பதற்றம் நிறைந்த தர்யாகஞ்ச் மற்றும் ஜமா மசூதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். எனினும், காலை முதல் வாக்கு பதிவு பல இடங்களில் அமைதியுடன் நடந்து வருகிறது. வாக்கு பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7-ந்தேதி நடைபெறுகிறது.
மதியம் 2 மணிவரை மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலை கடேவாரா பகுதி மக்கள் புறக்கணித்துள்ளனர். சாலைகள், வடிகால் பணிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகளிடம் எங்களின் குறைகளை கூறியும் தங்களின் குறைகளை கேட்காமல் இருப்பதால் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.