அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர் என காஷ்மீரி பண்டிட்டுகள் வேதனை: ராகுல் காந்தி
|எங்களை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர் என காஷ்மீரி பண்டிட்டுகள் வேதனை தெரிவித்தனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜம்மு,
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் 130-வது நாளாக இன்று நடந்து வருகிறது. அவருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் சில மாநிலங்களில் நடந்த யாத்திரையில் பங்கேற்றனர்.
இன்றைய பாதயாத்திரையில், காங்கிரஸ் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
அவர் கூறும்போது, இந்த பாதயாத்திரையின் ஒரு பகுதியாக காஷ்மீரி பண்டிட்டுகள் அடங்கிய குழுவை நான் சந்தித்து பேசினேன். அப்போது, அவர்கள் என்னிடம், தங்களை அவமரியாதை செய்கிறார்கள் என்பதுபோல் உணர்கிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.
எங்களை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர். எங்களுடைய பிரச்சனைகளை பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கோரிக்கையாக கேட்டு கொண்டனர் என்று கூறியுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில் காஷ்மீரில் வசித்து வரும் காஷ்மீரி பண்டிட்டுகளை இலக்காக வைத்து, பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்களுடன், திரை பிரபலங்கள் உள்பட காஷ்மீரி பண்டிட்டுகள் பலர் உயிரிழந்தனர்.
வேலைக்காக காஷ்மீரி பண்டிட்டுகள் பணியமர்த்தப்பட்டு உள்ள நிலையில், தாக்குதலுக்கு அஞ்சி, வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய கோரி அவர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்தும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேரணியாகவும், பேராட்டத்திலும் ஈடுபட்டனர்.
எனினும், காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்துள்ள அனைவரும் வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.