< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா இயக்க தளபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை
தேசிய செய்திகள்

காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா இயக்க தளபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை

தினத்தந்தி
|
20 March 2023 11:43 AM IST

ஜம்மு மற்றும் காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.



புல்வாமா,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சித்தர்குண்டு பகுதியில் ககபோரா என்ற இடத்தில் அப்துல் அஜீஸ் தார் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இவரது மகன் ரியாஸ் அகமது என்பவர் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இயக்கத்தில் இணைந்த அவர், பாதுகாப்பு வீரர்களிடம் சிக்காமல் நீண்ட காலம் தப்பி வருகிற பயங்கரவாதிகளில் ஒருவராக உள்ளார்.

அவருக்கு எதிராக புல்வாமா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட சில தேவையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. கடந்த வாரம், அனந்த்நாக் மாவட்டத்தில் தன்வித்புரா பகுதியில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய முகமது இஷாக் மாலிக் என்பவருடைய வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை நடத்தினர்.

அவர் மீது ஆயுத சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்பின் அவர் கைது செய்யப்பட்ட அனந்த்நாக்கில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா, வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மற்றும் சோப்பூர், மத்திய காஷ்மீரில் உள்ள புத்காம் ஆகிய 4 மாவட்டங்களில் வெவ்வேறு 5 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்