காஷ்மீர்: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியின் லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
|நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும், பயங்கரவாதிகளை கையாள கூடிய 11 பேரின் கோடிக்கணக்கான சொத்துகள் காஷ்மீரில் முடக்கப்பட்டு உள்ளன.
பாராமுல்லா,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை பற்றிய உளவு தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களுக்கு உதவி செய்வது, நிதி அளிப்பது, அடைக்கலம் கொடுப்பது ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை மீறி செயல்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிரடி நடவடிக்கையாக அவர்களுடைய சொத்துகளை முடக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, பாகிஸ்தானில் இருந்து கொண்டு, காஷ்மீரில் பயங்கரவாதிகளை இயக்க கூடிய நபர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும், பயங்கரவாதிகளை கையாள கூடிய நபரின் லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை பாராமுல்லா போலீசார் இன்று முடக்கியுள்ளனர்.
இதன்படி பாராமுல்லா மாவட்டத்தில், பயங்கரவாதிகளை கையாளும் பாகிஸ்தானை சேர்ந்த அத்ரீஸ் அகமது மிர் என்பவரின் சொத்துகளை முடக்க உரியில் உள்ள கோர்ட்டு உத்தரவை போலீசார் பெற்றனர். இவர், உரி பகுதியில் சிங்துங் கவ்ஹல்லான் பகுதியை சேர்ந்த ஷாகர் தின் மிர் என்பவருடைய மகன் ஆவார். அவருடைய லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.
நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும், பயங்கரவாதிகளை கையாள கூடிய 11 பேரின் கோடிக்கணக்கான சொத்துகள் காஷ்மீரில் முடக்கப்பட்டு உள்ளன. இதனை பாராமுல்லா போலீசார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.