< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்:  பயங்கரவாதிகள் கடத்திய ராணுவ வீரரின் உடல் குண்டு காயங்களுடன் மீட்பு
தேசிய செய்திகள்

காஷ்மீர்: பயங்கரவாதிகள் கடத்திய ராணுவ வீரரின் உடல் குண்டு காயங்களுடன் மீட்பு

தினத்தந்தி
|
9 Oct 2024 12:28 PM IST

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 பேர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதில் ஒருவர் தப்பி வந்துள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில், ராணுவத்தின் 161-வது பிரிவை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரவிலும் இந்த பணி தொடர்ந்தது. இதற்காக ரோந்து சென்றபோது, வீரர்களில் 2 பேர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கஸ்வான் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், அவர்களில் ஒருவர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளார். அவரை துப்பாக்கியால் சுட்டதில், 2 குண்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. எனினும், அவர் எப்படியோ தப்பி வந்து விட்டார். அவரை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அவருடைய உடல்நிலை சிகிச்சைக்கு பின்பு சீராக உள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரின் நிலைமை என்னவென உடனடியாக தெரிய வரவில்லை. இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து, காணாமல் போன வீரரை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்து வீரரை தேடும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் பத்ரிபால் வன பகுதியில் குண்டு காயங்களுடன் அந்த வீரர் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் என்ற வகையில் அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சூழலில், ரோந்து பணியின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் இருவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்