காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டை
|காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களில் நடப்பு ஆண்டின் ஜூலை 21-ந்தேதி வரை பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உதாம்பூர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்னிடாப் நகரருகே அகார் வன பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திர தினம் வரவுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு படைகள் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். எனினும், கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுண்ட்டரின்போது, 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்முவில் சமீப மாதங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதில், கத்துவா நகரில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் ஒன்று. கடந்த ஜூலையில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், நடப்பு ஆண்டின் ஜூலை 21-ந்தேதி வரை பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இவர்கள், 11 பயங்கரவாதம் தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் 24 பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின்போது மரணம் அடைந்தனர்.
இதேபோன்று, கடந்த மாதம் குப்வாரா மாவட்டத்தின் மச்சல் பிரிவில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானின் எல்லை அதிரடி படையினர் நடத்திய தாக்குதலை இந்திய படையினர் முறியடித்தனர்.
இந்த மோதலில், பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்திய ராணுவ வீரர் ஒருவரும் பலியானார். மேஜர் அளவிலான அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நாட்டின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள சூழலில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.