தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது: பிரதமர் மோடி
|பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம், பெண்களின் அதிகாரம், தூய்மையான ஆற்றல் ஆகியவற்றை குறிப்பிட்டதுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் பின்பு, மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். சில சமயங்களில் மக்களுடன் உரையாடியும் வருகிறார்.
இதனை முன்னிட்டு இந்த மாதத்திற்கான 99-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, உடல் உறுப்பு தானம், அதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விசயங்களை பற்றி பேசினார். இதன்படி, நாட்டில் 2013-ம் ஆண்டில் 5 ஆயிரம் என்ற அளவில் இருந்த உடல் உறுப்பு தானம், 2022-ம் ஆண்டில் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
இந்திய அதிகாரத்தில் பெண்களும் முன்னேறி வருவது பற்றியும் குறிப்பிட்ட அவர், 75 ஆண்டுகளில் முதன்முறையாக நாகாலாந்தில் 2 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான நிகழ்வையும், அவர்களில் ஒருவர் அமைச்சரவையில் மந்திரியாக ஆன தகவலையும் சுட்டி காட்டினார். இதனால், வளர்ந்து வரும் இந்தியாவின் அதிகாரத்துவத்தில் பெண்களின் அதிகாரமும் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் பேசியுள்ளார்.
உலக அளவில் தூய்மையான ஆற்றல் பிரிவு பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது என கூறிய அவர், அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள, சூரிய ஆற்றல் துறையில் இந்தியா விரைவாக முன்னேறி வருவது ஒரு பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், இந்திய விமான படையில், போர் படை பிரிவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் குரூப் கேப்டன் ஷாலிஜா தமி, உலகின் மிக உயரம் வாய்ந்த சியாச்சின் பனிமலை பகுதியில், இந்திய ராணுவத்தில் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கேப்டன் சிவா சவுகான் மற்றும் ஆசியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநர் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதன் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்ற சுரேகா யாதவ் ஆகிய 3 பேரையும் பிரதமர் மோடி சுட்டி காட்டி பேசியுள்ளார்.
இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்த மாதத்தில், தயாரிப்பாளர் குனீத் மோங்கா மற்றும் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோர் அவர்களது தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்திற்காக ஆஸ்கார் விருது வென்று அதன் வழியே நாட்டுக்கு புகழ் சேர்த்து உள்ளனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது. ஒற்றுமைக்கான மனநிலையுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் சவுராஷ்டிரர்கள் மற்றும் தமிழர்கள் இடையேயான ஆயிரம் ஆண்டு கால பிணைப்பு வலுப்பெற செய்யப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.