தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி புகழாரம்
|கருணாநிதியின் 100-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கருணாநிதி. கருணாநிதியின் 100-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நானும் கருணாநிதியும் முதல் மந்திரிகளாக இருந்த போது அவருடன் நடத்திய உரையாடல்களை நினைவுகூர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.