நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியதாக குற்றச்சாட்டு: சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்..!
|நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2011-ம் ஆண்டு சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு விசாரணைக்காக ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், அரசுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் குறிவைத்து மவுனமாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தன்மீது புனையப்பட்டுள்ள இந்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவையின் உரிமையை மீறிய ஒரு செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு துளியும் சம்பந்தமில்லாத தனக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் சிபிஐ தன்னுடைய வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அந்த சோதனையின்போது மிகவும் நம்பகத்தன்மை சில சொந்த குறிப்புகள், நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான சில ஆவணங்களையும் சிபிஐ எடுத்துச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ள சில சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ சோதனையின் போது எடுத்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக தன்னுடைய நடவடிக்கையில் சிபிஐ குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடி தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக முகாந்தரம் எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கார்த்தி சிதம்பரம் முன்வைத்துள்ளார்.