தேசிய செய்திகள்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டிக்கொடுப்போம்; கர்நாடக முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டிக்கொடுப்போம்; கர்நாடக முதல்-மந்திரி

தினத்தந்தி
|
3 Aug 2024 3:24 PM IST

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 29ம் தேதி இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக 30ம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. இரவு, அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். மேலும், காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன.


இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து 30ம் தேதி காலை முதல் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வயநாடு நிலச்சரிவில் இதுவரை 358 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, நிலச்சரிவு, வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுத்து மீண்டும் குடியமர்த்த கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன். மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நான் உத்திரவாதம் அளித்துள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கி மீண்டும் நம்பிக்கையை கொண்டுவருவோம்' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்