மராட்டியம் - கர்நாடகம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் மராட்டிய மந்திரிகள் பெலகாவி வர கர்நாடக அரசு எதிர்ப்பு
|எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் 6-ந்தேதி மராட்டிய மந்திரிகள் பெலகாவி வர எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு மராட்டிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மராட்டியம் - கர்நாடகம் இடையே 1960-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கர்நாடக ஆளுகைக்கு உட்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுபோல் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதியை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று கர்நாடக அரசும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், சட்டக்குழு மற்றும் பெலகாவியில் உள்ள மராத்தி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பா.ஜனதாவை சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த சம்புராஜ் தேசாய் ஆகிய 2 மந்திரிகளை மராட்டிய அரசு நியமித்துள்ளது.
தள்ளிவைப்பு
இவர்கள் 2 பேரும் இன்று (சனிக்கிழமை) கர்நாடகாவில் உள்ள சர்ச்சைக்குரிய பெலகாவி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த பயணத்தின்போது அவர்கள் பெலகாவியில் உள்ள மத்தியவர்த்தி மகாராஷ்டிரா ஏகீகிரன் சமிதி அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருந்தனர். இந்த ஆலோசனை மூலம் எல்லைப்பிரச்சினைக்கு தெளிவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்தநிலையில் மராட்டிய மந்திரிகளின் பெலகாவி பயணம் திடீெரன ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இன்றைக்கு பதிலாக 6-ந் தேதி பெலகாவிக்கு செல்ல உள்ளனர். இந்த தகவலை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், "சில அம்பேத்கர் அமைப்புகள் நாங்கள் 6-ந் தேதி பெலகாவியில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். எனவே அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6-ந் தேதி நாங்கள் பெலகாவியில் இருப்போம்" என கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்பு
இதற்கு கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் கண்டன போராட்டங்களிலும் கன்னட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே இப்பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற இருந்தது. அதையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லிக்கு சென்று இப்பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வரும் வக்கீல் முகுல் ரோத்தகியை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் எல்லை பிரச்சினை தொடர்பாகவும், பெலகாவி கர்நாடகத்துக்கே சொந்தம் என்ற வகையிலும் உள்ள ஆவணங்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
சரியல்ல
இந்த நிலையில் மராட்டிய மந்திரிகள் ஆலோசனை செய்யவும், ஆய்வு செய்யவும் பெலகாவிக்கு வர இருப்பதாக தகவல் பரவி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெலகாவிக்கு சென்றிருந்தார். அவர் பெலகாவி மாவட்டம் ராமதுர்காவில் நிருபர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை இருக்கிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மராட்டிய மந்திரிகள் 2 பேர் வருகிற 6-ந் தேதி பெலகாவிக்கு வருகை தருவது சரியல்ல. இதுகுறித்து நமது தலைமை செயலாளர், மராட்டிய மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குடிநீர் கிடைக்காமல்...
கர்நாடகத்தின் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் நமது மாநிலம் முன்பு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்ததோ அதேபோன்ற நடவடிக்கைகளை இப்போதும் எடுக்கிறோம். மராட்டிய எல்லைக்குள் உள்ள ஜத் தாலுகா மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய அளவில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மராட்டிய மாநிலம் தற்போது குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதாக சொல்கிறது. இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.