காதலை ஏற்க மறுத்த வாலிபர்... மைனர் பெண் செய்த கொடூர செயல்
|தனது காதலை ஏற்காத அந்த வாலிபரை, மைனர் பெண் பழிவாங்க எண்ணினாள்.
யாதகிரி,
கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி சித்தம்மா. இந்த தம்பதிக்கு மீனாட்சி என்ற 2 மாத குழந்தை இருந்தது. அப்பகுதியில் 18 வயது நிரம்பாத மைனர் பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவருக்கு நாகேஷ் சித்தப்பா முறையாகும். அதுபோல் நாகேசின் தம்பி எல்லப்பா என்பவரும் அந்த சிறுமிக்கு சித்தப்பா முறை ஆவார். ஆனால் அந்த மைனர் பெண், முறை தவறி எல்லப்பாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அப்போது மைனர் பெண்ணின் காதலை எல்லப்பா நிராகரித்துள்ளார்.
இதனால் அந்த மைனர் பெண் எல்லப்பாவை பழிவாங்க எண்ணினாள். இதற்காக எல்லப்பாவின் அண்ணன் மகளான 2 மாத குழந்தை லட்சுமியை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, அந்த பழியை எல்லப்பா மீது போட திட்டமிட்டாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த குழந்தை மீனாட்சி மாயமானது.
இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் குழந்தையை தேடினர். மேலும் இதுபற்றி யாதகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையை தேடினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் குழந்தை பிணமாக மிதந்தது.
பின்னர் குழந்தையின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை கொன்றது யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் எல்லப்பாவை ஒருதலையாக காதலித்த அந்த மைனர் பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதையடுத்து போலீசார் அந்த மைனர் பெண்ணை பிடித்து விசாரித்தனர். முதலில் அந்த மைனர் பெண் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடினார்.
ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் எல்லப்பா தனது காதலை ஏற்காததால் அவரை பழிவாங்க அவருடைய அண்ணன் நாகேசின் மகளான 2 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதை அந்த மைனர் பெண் ஒப்புக் கொண்டார். அதையடுத்து போலீசார் மைனர் பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.