< Back
தேசிய செய்திகள்
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆகிறார், மத்திய மந்திரி ஷோபா?
தேசிய செய்திகள்

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆகிறார், மத்திய மந்திரி ஷோபா?

தினத்தந்தி
|
6 July 2023 3:25 AM IST

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை மத்திய மந்திரி ஷோபாவுக்கு வழங்கும்படி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால், கட்சி தலைமை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் மாநில தலைவரை நியமிப்பதிலும், எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதிலும் பா.ஜனதா தலைமை காலதாமதம் செய்து வருகிறது. சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் இன்னும் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை. மாநில தலைவராக இருக்கும் நளின்குமார் கட்டீலின் பதவி காலம் நிறைவு பெற்றிருந்த போதும், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பது குறித்து கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா 2 நாட்களுக்கு முன்பாக டெல்லி சென்றிருந்தார். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற தலைவர்களை அவர் சந்தித்து பேசி இருந்தார். அப்போது மாநில தலைவராக யாரை நியமிக்கலாம், எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து சில ஆலோசனைகளை எடியூரப்பா வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், மாநில தலைவர் பதவிக்கு மத்திய மந்திரி ஷோபாவை நியமிக்கும்படி எடியூரப்பா கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய மந்திரியாக அவர் திறமையாக பணியாற்றுவதாலும், அவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளும் இல்லாததாலும், ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஷோபாவின் பெயரை எடியூரப்பா சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில் லிங்காயத் சமூகத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படலாம் என்பதாலும், பெண் ஒருவர் மாநில தலைவராக இருந்தால், கட்சிக்கு அனுகூலாக இருக்கும் என்றும் எடியூரப்பா கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் யார் மாநில தலைவர் ஆவார் என்பதை பா.ஜனதா தலைமை தான் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது.

மேலும் செய்திகள்