< Back
தேசிய செய்திகள்
மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு: கைதான மடாதிபதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு: கைதான மடாதிபதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
2 Sept 2022 5:16 AM IST

கர்நாடகாவில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்ரதுர்கா மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை நேற்றிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சித்ரதுர்கா,

சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த 2 மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது கடந்த 26-ந்தேதி சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சித்ரதுர்கா போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்து இருந்தனர்.

முன்ஜாமீன் கேட்டு மனு

இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சார்பில் சித்ரதுர்கா கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜராகும் வக்கீல் சீனிவாஸ் கூறும்போது, மடாதிபதிக்கு முன்ஜாமீன் கிடைக்காத வகையில் கோர்ட்டில் எனது வாதம் இருக்கும் என்று குறிப்பிட்டார். இதற்கிடையே மடத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மடாதிபதி மீதான பாலியல் புகார் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது.

விளக்கம் கேட்டு நோட்டீசு

மேலும் பாலியல் புகார் பற்றி கடந்த ஒரு வாரமாக என்ன விசாரணை நடந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராமுக்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. இதுபோல மாநில மகளிர் ஆணையமும் பாலியல் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை பற்றி தகவலை வழங்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பரசுராமுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மடத்தின் அதிகாரி பசவராஜன், அவரது மனைவி சவுபாக்யா ஆகியோர் ஜாமீன் கேட்டு சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுக்களை நேற்று விசாரித்த கோர்ட்டு பசவராஜன், சவுபாக்யா ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி உள்ளது.

மடாதிபதி அதிரடி கைது

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சித்ரதுர்கா போலீசார், முருக மடத்திற்கு சென்று, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை கைது செய்தனர். பின்னர் அவரை காரில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. கொட்டு் மழையில் மடாதிபதி கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

போலீஸ் குவிப்பு

மடாதிபதி கைது நடவடிக்கையை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடம் மற்றும் சித்ரதுர்கா நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மடாதிபதி கைது செய்யப்பட்ட தகவலை அறிந்து பக்தர்கள் மடத்திற்கு வரத்தொடங்கினர். ஆனால் அங்கு பக்தர்களை போலீசார் அனுமதிக்காமல் துரத்தினர்.

கைதான மடாதிபதியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தகவல் வந்தது. ஆனால் போலீசார் அங்கு அழைத்து செல்லவில்லை.

அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மடாதிபதியிடம் சித்ரதுர்கா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணநாயக், முலகால்மூரு இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு தொடர்பாக சித்ரதுர்கா மடாதிபதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

6 நாட்களுக்கு பிறகு...

பாலியல் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்